லட்டு

லட்டு ஒன்று வாங்கலாம்
லாவகமாய் தின்னலாம்
பிட்டு பிட்டு ஆசையாய்
பிறருக்குமே கொடுக்கலாம்
சீனி கடலை மாவினால்
சேர்த்து செய்த லட்டிது
ஈ மொய்க்கா பாட்டிலில்
கடைவீதியிலே விற்குது
வேண்டியதைத் தின்னலாம்
ஓடி பாடி ஆடலாம்
-வல்லநாடு ராமலிங்கம்

பசு

வெள்ளை நிறப் பசுவிது
விரும்பி புல்லைத் தின்னுது
கழனி தந்தால் அன்புடன்
வாலை ஆட்டிக் குடிக்குது
தொட்டுத் தடவிக் குடுக்கையில்
தோளை மெல்ல ஆட்டுது
காலை - மாலை வேளையில்
பாலை நிறையக் கொடுக்குது
கனிவுடனே நன்மைகள்
பல நமக்குச் செய்யுது
-வல்லநாடு ராமலிங்கம்

வடை

பாட்டி சுட்ட வடையிது
பருப்பும் உளுந்தும் கலந்தது
வட்ட வடிவ வடையிது
வாய்க்கு ருசியாய் இருக்குது
மிருதுவான வடையிது
மென்று தின்ன ருசிக்குது
மூக்கை வாசம் துளைக்குது
மொறு-மொறுன்னு இருக்குது
தின்ன தின்ன கேட்குது
தினமும் கேட்க தோணுது
-வல்லநாடு ராமலிங்கம்

நிலா

வட்ட வடிவ நிலவிது
வானில் மிதந்து செல்லுது
இரவில் நமக்குத் தெறியுது
தேய்ந்து மீண்டும் வளருது
எட்டி எட்டி பார்க்குது
எட்டாமல் தான் வருகுது
சோறு ஊட்ட உதவுது
சோலைக் கழகு காட்டுது

காக்கா நரியின் கதை

பாப்பா பாப்பா கதை கேளு
காக்கா நரியின் கதை கேளு
தாத்தா பாட்டி சொன்ன கதை
அம்மா அப்பா கேட்ட கதை
ஊருக்கு வெளியே ஒரு கடையாம்
கடையில் வெங்காய வடை இருக்காம்
வடையைக் காக்கா திருடிடிச்சாம்
மரத்தின் மேலே ஏறிகிச்சாம்
காக்கா வாயிலே வடையிருக்கா
குள்ள நரியும் பாத்திருச்சாம்
நேக்கா வடையை தின்றிடவே
நரியும் தந்திரம் பண்ணிடுச்சாம்
காக்காவ பாட்டு பாடச் சொல்லி
குள்ள நரியும் கேட்டுகிச்சாம்
வாய திறந்து காக்காவும்
பாட்டு ஒன்னு பாடிடுச்சாம்
வடையும் கீழே விழுந்திருச்சாம்
நரியும் வடையை கவ்விகிச்சாம்
வாயில போட்டு முழுங்கிருச்சாம்

தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு

தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு ஒன்று
துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி
அம்மா என்றது வெள்ளை பசு உடன்
அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி
நாவால் நக்குது வெள்ளை பசு
பாலை நன்றாய் குடிக்குது கன்றுக் குட்டி
முத்தம் கொடுக்குது வெள்ளைப்பசு மடி
முட்டிக்கொடுக்குது கன்றுக்குட்டி

பனை மரமே

பனை மரமே பனை மரமே
ஏன் வளர்ந்தாய் பனை மரமே?
நான் வளர்ந்த காரணத்தை
நல்லவரே சொல்லுகின்றேன்
படுக்க நல்ல பாயாவேன்
வசிக்க நல்ல வீடாவேன்
வெட்ட நல்ல விறகாவேன்
வீடு கட்ட மரமாவேன்

ஆத்திச்சூடி

அறம் செய்ய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஈவது விளக்கேல்
உடையது விளம்பேல்
ஊக்கமது கைவிடேல்
எண் எழுத்து இகழேல்
ஏற்பது இகழ்ச்சி
ஐயம் இட்டு உண்
ஒப்புரவு ஒழுகு
ஓதுவது ஒழியேல்
ஔவியம் பேசேல்
அஃகம் சுருக்கு

சின்னச் சின்ன மோட்டார்

சின்னச் சின்ன மோட்டார்
சிங்கார மோட்டார்
நான்கு சக்கர மோட்டார்
நாங்கள் ஏறும் மோட்டார்
பாம் பாம் மோட்டார்
பாய்ந்து செல்லும் மோட்டார்

வேண்டும் முயற்சி (பெருஞ்சித்திரனார்)

சிலந்தி வலையைப் பாருங்கள்
சின்னஞ் சிறிய பூச்சியே
வளைந்து வளைந்து புதுமையாய்
வட்ட வலையைப் பின்னுமே
தேனிக்கூட்டைப் பாருங்கள்
திறமையோடு ஒற்றுமையாய்
பெரிய முயற்சி வேண்டுமே
பேணி வீட்டைக் கட்டுமே
எறும்புப் புற்றைப் பாருங்கள்
எள்ளைப் போன்ற எறும்புகள்
அருமையான முயற்சியால்
அழகுப் புற்றைச் செய்தன
குருவிக் கூட்டைப் பாருங்கள்
குடுக்கை போன்று பின்னியே
விரைவில் கட்டி முடிக்குமே
வேண்டும் முயற்சி என்றுமே

நல்ல நாய்க்குட்டி

சின்னச் சின்ன நாய்க்குட்டி
வெள்ளை நிற நாய்க்குட்டி
பஞ்சுப் பொதி நாய்க்குட்டி
பன்னும் தின்னும் நாய்க்குட்டி
நன்றி சொல்லும் நாய்க்குட்டி
சின்னச் சின்னக் குழந்தைகள்
கொஞ்சி மகிழும் நாய்க்குட்டி
உன்னைக் கண்டால் பிஞ்சுகள்
நெஞ்சம் மகிழ்ந்து கொஞ்சுமே
துள்ளித் துள்ளி ஓடுவாய்
அள்ளிஅள்ளித் தூக்கலாம்
வாலை வாலை ஆட்டியே
வரவேற்பு தருவாயே

பாப்பா

குட்டிக் குட்டி பாப்பா
குண்டு கன்னம் பாப்பா
தத்தித் தத்தி நடந்திடும்
கட்டித் தங்க பாப்பா
கண்கள் உருட்டி காட்டுவாள்
வாயை மூடிச் சிரிப்பாள்
சுட்டித்தனம் செய்வாள்
எங்கள் தங்கைப் பாப்பா

சேர்ந்து செய்வோம்

துண்டுத்தாள்கள் கிடந்தன
தூக்கி வீசி எறிந்தனர்
கண்டு சிறுவன் எடுத்தனன்
கப்பல் செய்து மகிழ்ந்தனன்
துண்டுத் துணிகள் கிடந்தன
தூக்கி வீசி எறிந்தனர்
கண்டு சிறுமி எடுத்தனள்
கணக்காய் பொம்மை செய்தனள்
வண்ணத்தாள்கள் கிடந்தன
வாரி வீசி எறிந்தனர்
சின்னப் பையன் கண்டனன்
சேர்த்துப் பூக்கள் செய்தனன்
சிறிய துரும்பும் முயற்சியால்
சிறந்த பொருளாய் மாறுமே
சின்னச்சிறுவர் நாமுமே
சேர்ந்து பொருட்கள் செய்வோமே

பலூன்

பத்து காசு விலையிலே பலூன் ஒன்று வாங்கினேன்
பலூன் ஒன்று வாங்கினேன் பைய பைய ஊதினேன்
பலமாய் நானும் ஊதவே பந்துபோல ஆனது
பந்து போல ஆனதும் பலமாய் இன்னும் ஊதினேன்
பலமாய் நானும் ஊதவே பானை போல ஆனது
பானை போல ஆனதை பார்க்க ஓடி வாருங்கள்
விரைவில் வந்தால் பார்க்கலாம் இல்லை
வெடிக்கும் சத்தம் கேட்கலாம்

ஆனை ஆனை அழகர் ஆனை

ஆனை ஆனை அழகர் ஆனை
அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை
கட்டிக்கரும்பை முறிக்கும் யானை
காவேரித் தண்ணீரை கலக்கும் யானை
குட்டி ஆனைக்குக் கொம்பு முளைச்சுதாம்
பட்டணமெல்லாம் பறந்தோடிப் போச்சுதாம்

ஒன்றும் ஒன்றும் இரண்டு

ஒன்றும் ஒன்றும் இரண்டு
பூவில் இருப்பது வண்டு
இரண்டும் இரண்டும் நான்கு
இனிப்பாய் இருக்கும் தேங்காய்
மூன்றும் மூன்றும் ஆறு
வேலை செய்தால் சோறு
நான்கும் நான்கும் எட்டு
நன்றாய் பாடுவாள் பட்டு
ஐந்தும் ஐந்தும் பத்து
அன்பே நமது சொத்து

ஒன்று இரண்டு மூன்று

ஒன்று இரண்டு மூன்று
ஓணான் எங்கே கூறு
நான்கு ஐந்து ஆறு
மரத்தின் மேலே பாரு
ஏழு எட்டு ஒன்பது
என்ன அதன் பேரு
ஓணான் என்றே கூறு

அம்மா இங்கே வா வா - அகர வரிசை பாடல்

அம்மா இங்கே வா வா
ஆசை முத்தம் தா தா
இலையில் சாதம் போட்டு
ஈயை தூர ஓட்டு
உன்னை போல நல்லார்
ஊரில் யார்தான் உள்ளார்
என்னால் உனக்கு தொல்லை
ஏதும் இங்கே இல்லை
ஐயம் இன்றி சொல்வேன்
ஒற்றுமை என்றும் பலமாம்
ஓதும் செயலே நலமாம்
ஔவை சொன்ன மொழியாம்
அஃதே எனக்கு வழியாம்

அம்மா அம்மா என்னம்மா

அம்மா அம்மா என்னம்மா
அழகாய் முத்தம் தந்திடுவாய்
கண்ணைப் போல என்னையே
காக்கும் கருணை தெய்வம் நீ
அம்மா நானும் வளர்ந்திடுவேன்
உலகம் எங்கும் புகழ் பெறுவேன்

பொம்மை

பொம்மை பொம்மை பொம்மை பார்
புதிய புதிய பொம்மை பார்
கையை வீசும் பொம்மை பார்
கண்ணைச் சிமிட்டும் பொம்மை பார்
எனக்குக் கிடைத்த பொம்மை
தலையை ஆட்டும் பொம்மை பார்
தாளம் போடும் பொம்மை பார்
எனக்குக் கிடைத்த பொம்மை போல்
எதுவும் இல்லை உலகிலே
-தணிகை உலகநாதன்

சின்னச் சின்னப் பூனையாம்

சின்னச் சின்னப் பூனையாம்
சீறிப்பாயும் பூனையாம்
கன்னங்கரிய பூனையாம்
கருப்பு மீசைப் பூனையாம்
இரவில் சுற்றும் பூனையாம்
எலியைப் பிடிக்கும் பூனையாம்
புலியைப் போன்ற பூனையாம்
புத்திசாலிப் பூனையாம்

எங்கள் வீட்டு நாய்க்குட்டி

எங்கள் வீட்டு நாய்க்குட்டி
நன்றி உள்ள நாய்க்குட்டி
வெள்ளை நிற நாய்க்குட்டி
துள்ளி ஓடும் நாய்க்குட்டி
குட்டிப் பாப்பா தன்னோடு
குதித்து ஆடும் நாய்க்குட்டி
கண்ணைப் போல வீட்டையே
காவல் காக்கும் நாய்க்குட்டி

மாம்பழமாம் மாம்பழம்

மாம்பழமாம் மாம்பழம்
மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம்
தித்திக்கும் மாம்பழம்
அழகான மாம்பழம்
அல்வா போல மாம்பழம்
உங்களுக்கு வேண்டுமா
இங்கே ஓடி வாருங்கள்
பங்கு போட்டு தின்னலாம்
அழ.வள்ளியப்பா

சின்னச் சின்ன பம்பரம்

சின்னச் சின்ன பம்பரம்
வண்ண வண்ண பம்பரம்
கன்னம் போல மின்னுதே
கடைந்த இந்த பம்பரம்
சாட்டை சுற்றி வீசினேன்
சுழன்று என்னை கவர்ந்ததே

காக்கா காக்கா பறந்து வா

காக்கா காக்கா பறந்து வா
காலையில் எழுந்து பறந்து வா
சேவல் கோழி ஓடி வா
கூவி எழுப்பிட ஓடி வா
கிளியே கிளியே பறந்து வா
கிள்ளை மொழி பேசி வா
பப்பி நாய்க்குட்டியே ஓடி வா
பந்தை வாயில் கௌவி வா
வெள்ளை பசுவே விரைந்து வா
பிள்ளைக்கு பாலும் கொண்டு வா

அசைந்தாடம்மா அசைந்தாடு

அசைந்தாடம்மா அசைந்தாடு
ஆசைக் கிளியே அசைந்தாடு
இனிய இசையே அசைந்தாடு
ஈர நெஞ்சே அசைந்தாடு
உதய நிலவே அசைந்தாடு
ஊதும் குழலே அசைந்தாடு
எழில் மயிலே அசைந்தாடு
ஏற்றத்தோடு அசைந்தாடு
ஐயம் விட்டு அசைந்தாடு
ஒழுக்கம் பேணி அசைந்தாடு
ஓவிய நூலே அசைந்தாடு
ஓளவியமின்றி அசைந்தாடு

ஆட்டுக்குட்டி

துள்ளி வரும் ஆட்டுக்குட்டி
தாவி வரும் ஆட்டுக்குட்டி
பள்ளி செல்ல வருவாயோ?
பாடம் சொல்லித் தருவாயோ?
கள்ளம் இல்லை உன் மனதில்
கபடம் இல்லை உன்னிடத்தில்
பள்ளம் மேடு வந்தாலும்
பாய்ந்து ஓடும் ஆட்டுக்குட்டி
தொல்லை இல்லா ஆட்டுக்குட்டி
தோல் கறுத்த ஆட்டுக்குட்டி
சொல்லைக் கேட்டு வீட்டையே
சுற்றி வருமே ஆட்டுக்குட்டி

நல்ல நல்ல மாம்பழம்

நல்ல நல்ல மாம்பழம்
நீண்டு பருத்த மாம்பழம்
வெல்லக் கட்டி மாம்பழம்
வாங்கித் தின்று பார்க்கலாம்
பொன் நிறத்து மாம்பழம்
பழுத்த புதிய மாம்பழம்
சின்ன மூக்கு மாம்பழம்
சிவப்பு பச்சை மாம்பழம்
சிறுவர் விரும்பும் மாம்பழம்
சுவை மிகுந்த மாம்பழம்
குலை குலையாய் மாம்பழம்
காண வாயும் ஊறுமே

சிக்கு புக்கு ரயிலு

சிக்கு புக்கு ரயிலு வருகிறதே
அக்கம் பக்கம் நிற்காதே
ரயிலு நின்ற பின் ஏறிக்கலாம்
பாப்பா நீயும் அழுவாதே
லட்டு வாங்கித் தருவேனே
காய்ச்சிய பாலும் தருவேனே

வாள் வாள் என்று குரைக்காது

வாள் வாள் என்று குரைக்காது
எங்கள் வீட்டு நாய்க்குட்டி
எனக்குப் பிடித்த நாய்க்குட்டி
பாலும் சோறும் உண்ணாது
பக்கம் அழைத்தால் வராது
எங்கள் வீட்டு நாய்க்குட்டி
எனக்குப் பிடித்த நாய்க்குட்டி
அங்கும் இங்கும் ஓடாது
அதனால் தொல்லை கிடையாது
எங்கள் வீட்டு நாய்க்குட்டி
எனக்குப் பிடித்த நாய்க்குட்டி
அப்படி என்ன நாய்க்குட்டி
அதிசயமான நாய்க்குட்டி
அப்பா எனக்கு வாங்கித் தந்த
ரப்பர் பொம்மை நாய்க்குட்டி

குள்ளக் குள்ள வாத்து

குள்ளக் குள்ள வாத்து
குவா குவா வாத்து
மெல்ல உடலை சாய்த்து
மேலும் கீழும் பார்த்து
செல்லமாக நடக்கும்
சின்ன மணி வாத்து

கை வீசம்மா

கை வீசம்மா கை வீசு
கடைக்குப் போகலாம் கை வீசு
மிட்டாய் வாங்கலாம் கை வீசு
மெதுவாய் தின்னலாம் கை வீசு
சொக்காய் வாங்கலாம் கை வீசு
சொகுசாய் போடலாம் கை வீசு
கோவிலுக்குப் போகலாம் கை வீசு
கும்பிட்டு வரலாம் கை வீசு

காக்கா கண்ணுக்கு மை

காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா
குருவி கொண்டைக்கு பூ கொண்டு வா
கொக்கே குழந்தைக்கு பால் கொண்டு வா
கிளியே குழந்தைக்கு பழம் கொண்டு வா

மழையே மழையே வா வா

மழையே மழையே வா வா
மரங்கள் வளர வா வா
குளங்கள் நிறைய வா வா
குடைகள் பிடிக்க வா வா
உலகம் செழிக்க வா வா
உழவர் மகிழ வா வா
ஆறுகள் பெருக வா வா
படகில் போக வா வா
ஆட்டம் போடலாம் வா வா

சாஞ்சாடம்மா சாஞ்சாடு

சாஞ்சாடம்மா சாஞ்சாடு
செல்லக்கிளியே சாஞ்சாடு
தித்திக்கும் தேனே சாஞ்சாடு
தெவிட்டாத தேனே சாஞ்சாடு
மயிலே குயிலே சாஞ்சாடு
மாடப்புறாவே சாஞ்சாடு
கட்டிக் கறும்பே சாஞ்சாடு
காய்ச்சிய பாலே சாஞ்சாடு
குத்து விளக்கே சாஞ்சாடு
குட்டி நிலாவே சாஞ்சாடு

கொழு கொழு கண்ணே

கொழு கொழு கண்ணே
கன்றின் தாயே
தாயை மேய்க்கும் ஆயா
ஆயன் கைக் கோலே
கோல் வளரும் கொடி மரமே
கொடி மரத்தில் இருக்கும் கொக்கே
கொக்கு நீராடும் குளமே
குளத்தில் வாழும் மீனே
மீன் பிடிக்கும் வலையா
வலையன் கைக் கலையமே
கலையம் செய்யும் குயவா
குயவன் எடுக்கும் மண்ணே
மண்ணில் வளரும் புல்லே
புல்லை தின்னும் குதிரையே
என் பேர் என்ன?
ஈ ஈ ஈ ஈ ...

வட்டமான தட்டு

வட்டமான தட்டு
தட்டு நிறைய லட்டு
லட்டு மொத்தம் எட்டு
எட்டில் பாதி விட்டு
எடுத்தான் மீதம் கிட்டு
மீதம் உள்ள லட்டு
முழுதும் தங்கை பட்டு
போட்டாள் வாயில் பிட்டு
கிட்டு நான்கு லட்டு
பட்டு நான்கு லட்டு
மொத்தம் தீர்ந்தது எட்டு
மீதம் காலி தட்டு

கிழமைகள்

ஞாயிற்றுக்கிழமை - நகையைக் காணோம்
திங்கட்கிழமை - திருடன் கிடைத்தான்
செவ்வாய்க்கிழமை - ஜெயிலுக்குப் போனான்
புதன்கிழமை - புத்தி வந்தது
வியாழக்கிழமை - விடுதலை அடைந்தான்
வெள்ளிக்கிழமை - வெளியே வந்தான்
சனிக்கிழமை - சாப்பிட்டுப் படுத்தான்
அப்புறம் அவன் கதை யாருக்குத் தெரியும்?

யானையம்மா யானை

யானையம்மா யானை
யம்மாம் பெரிய யானை
தந்தமுள்ள யானை
தடிமனான யானை
காதைப் பாரு பெரிசு
கண்கள் ரெண்டும் சிறிசு
சாதுவான யானை
சக்தி மிக்க யானை

வயல்

பச்சை நிறத்துப் பயிரைப் பார்
பசுமை கொஞ்சும் எழிலைப் பார்
கண்ணுக்கினிய காட்சி பார்
கவிதை மனதில் தோன்றும் பார்
பச்சைக் கம்பளம் விரித்தது யார்?
பசுமை பூக்க வைத்தது யார்?
பசியைத் தீர்க்கும் தொழில் இதுவே
பாரினில் சிறந்த தொழில் இதுவே

வெள்ளை நிற முயலக்கா

வெள்ளை நிற முயலக்கா
வெளியே வந்து பாரக்கா
சின்னஞ்சிறு கைகளால்
செடியைத் தின்னும் முயலக்கா
அங்கும் இங்கும் ஓடினாலும்
அழகாய்த் தோன்றும் முயலக்கா

பூனைக்கும் பூனைக்கும் கல்யாணமாம்

பூனைக்கும் பூனைக்கும் கல்யாணமாம்
யானை மேலே ஊர்வலமாம்
ஒட்டகசிவிங்கி நாட்டியமாம்
ஊர்க் குருவியின் பின் பாட்டாம்
அற்புதமான சாப்பாடாம்
தாலி கட்டும் நேரத்துல
மாப்பிப்ளை பூனையைக் காணோமாம்
வந்தவரெல்லாம் தேடினாராம்
வருத்தம் கொண்டு திரும்பினாராம்
பக்கத்து வீட்டுப் பாலைத்தான்
திருடி அதுவும் குடித்ததாம்
திருட்டுப்பூனைக்கு என் பெண்ணை
திருமணம் செய்து தரமாட்டேன்
வேண்டாம் இந்த சம்பந்தம்
வெட்கக் கேடு போய் வரலாம்

குள்ள நரி

குள்ள நரியே குள்ள நரியே எங்கே போகிறாய்?
குறுக்கு வழியில் யாரை நீயும் மடக்கப் போகிறாய்?
வஞ்சகத்தால் தானே உந்தன் வயிற்றை வளர்க்கிறாய்
நல்லவனாய் நாடகமும் நடத்திக் காட்டுறாய்

கரடி மாமா வருகிறார்

கரடி மாமா வருகிறார்
கண்ணா இங்கே ஓடி வா
குட்டிக்கரணம் போடுறார்
குதித்து குதித்து நடக்கிறார்
கோலைத் தோளில் வைக்கிறார்
குனிந்து நிமிர்ந்து பார்க்கிறார்
கரடி வித்தை பார்க்கவே
காசு பத்து கொடுக்கலாம்

துள்ளி ஓடும் மான்குட்டி

துள்ளி ஓடும் மான்குட்டி
புள்ளி கொண்ட மான்குட்டி
கொம்பு கொண்ட மான்குட்டி
குதிக்கும் நல்ல மான்குட்டி
காட்டில் வாழும் மான்குட்டி
இலையைத் தின்னும் மான்குட்டி
ஓடியாடும் மான்குட்டி
ஒன்றாய் வாழும் மான்குட்டி

காக்கா நிறம் கறுப்பக்கா

காக்கா நிறம் கறுப்பக்கா
காக்கா கத்தும் கா கா கா
சின்ன சின்ன அலகக்கா
சேர்ந்தே தின்னும் ஒன்றாக
வட்ட வட்ட கண்ணக்கா
வானில் பறக்கும் காக்காக்கா
பட்டு போல இறக்கைக்கா
பறந்து செல்லும் காக்காக்கா

நிலா நிலா ஓடி வா

நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
மலை மேலே ஏறி வா
மல்லிகைப்பூ கொண்டு வா
வட்ட வட்ட நிலாவே
வண்ண முகில் பூவே
பட்டம் போல பறந்து வா

தோ தோ நாய்க்குட்டி

தோ தோ நாய்க்குட்டி
துள்ளி வரும் நாய்க்குட்டி
பாலைக் குடிக்கும் நாய்க்குட்டி
பாசம் காட்டும் நாய்க்குட்டி
கறிகள் தின்னும் நாய்க்குட்டி
காவல் காக்கும் நாய்க்குட்டி
வாலை ஆட்டும் நாய்க்குட்டி
வாட்டம் போக்கும் நாய்க்குட்டி
வீட்டைச் சுற்றும் நாய்க்குட்டி
விரும்பும் நல்ல நாய்க்குட்டி

பம்பரம்

சொக்கன் விட்ட பம்பரம், சோமு விட்ட பம்பரம்
தலையை ஆட்டிச் சுற்றுது, தரையில் நின்று சுற்றுது
கொண்டையுள்ள பம்பரம், கொய்யக்கட்டை பம்பரம்
சாட்டை கொண்டு சுற்றலாம், சவுக்காட்டம் ஆடலாம்
அழகு வண்ண பம்பரம், அறுபது காசுப் பம்பரம்

தீபாவளி

வந்தது பார் தீபாவளி
இனி வாழ்வெல்லாம் இன்ப ஒளி
அதிகாலை எண்ணெய் வைத்து
நீராடி மனம் மகிழ்வோம்
புத்தம் புது ஆடை அணிவோம்
நாம் மத்தாப்பு கொளுத்திடுவோம்
எல்லோருக்கும் வாழ்த்து சொல்லி
இறைவனுக்கு நன்றி சொல்வோம்

எங்கள் வீட்டுப் பூனை

எங்கள் வீட்டுப் பூனை
இருட்டில் உருட்டும் பூனை
அங்கும் இங்கும் தேடும்
ஆளைக் கண்டால் ஓடும்
காலால் எலியைப் பிடிக்கும்
தயிரை ஏறிக்குடிக்கும்
நாவால் உடலைத் துடைக்கும்
நாற்காலியின் கீழே படுக்கும்

தாகம் தீர்ந்த காக்காய்

தாகத்தோடு காக்கா ஒன்று
தண்ணீருக்கு அலைந்ததாம்
வானில் பறந்து செல்கையில்
வயலில் பானை பார்த்ததாம்
கொஞ்சம் நீரே இருந்ததால்
குடிக்க முடியாமல் தவித்ததாம்
சின்ன சின்ன கற்களை
கொண்டுவந்து போட்டதாம்
கல்லு அதிகம் ஆனதும்
தண்ணீர் மேலே வந்ததாம்
தண்ணீர் குடித்த காக்கா
தாகம் தீர்ந்து பறந்ததாம்

தோசை

தோசை அம்மா தோசை அம்மா சுட்ட தோசை!
அரிசி மாவும் உளுந்து மாவும் கலந்து சுட்ட தோசை!
அப்பாவுக்கு நாலு அம்மாவுக்கு மூன்று
அண்ணணுக்கு இரண்டு பாப்பாவுக்கு ஒன்று
திங்க திங்க ஆசை திரும்பக் கேட்டால் பூசை!

நாய்குட்டி

தோ தோ நாய்குட்டி
துள்ளி ஓடும் நாய்குட்டி!
பாலை குடிக்கும் நாய்குட்டி
பாசம் காட்டும் நாய்குட்டி!
கரிகள் தின்னும் நாய்குட்டி
காவல் காக்கும் நாய்குட்டி!
வாலை ஆட்டும் நாய்குட்டி
வாட்டம் போக்கும் நாய்குட்டி!
வீட்டை சுற்றும் நாய்குட்டி
விரும்பும் நல்ல நாய் குட்டி

எண்கள்

ஒன்று யாருக்கும் தலை ஒன்று;
இரண்டு முகத்தில் கண் இரண்டு;
மூன்று முக்காலிக்கு கால் மூன்று
நான்கு நாற்காலிக்குக் கால் நான்கு
ஐந்து ஒரு கை விரல் ஐந்து
ஆறு ஈயின் கால் ஆறு
ஏழு வாரத்தின் நாள் ஏழு
எட்டு சிலந்திக்கு கால் எட்டு
ஒன்பது தானிய வகை ஒன்பது
பத்து இருகை விரல் பத்து
-பேராசிரியர் கா நமச்சிவாயர்

குருவி பாட்டு

குருவி பறந்து வந்ததாம்
குழந்தை அருகில் நின்றதாம்
பாவம் அதற்குப் பசித்ததாம்
பாப்பா நெல்லைக் கொடுத்ததாம்
குருவி அந்த நெல்லையே
கொத்திக் கொத்தித் தின்றதாம்
பசியும் நீங்கிப் பறந்ததாம்
பாப்பா இன்பம் கொண்டதாம்
-கவிமணி தணிகை உலகநாதன்

நாலு மாடுகளும் ஒரு சிங்கமும்

அழகான கிராமத்தில் நாலு மாடு இருந்ததாம்
அங்கே இங்கே அலைஞ்சாலும் நாலும் ஒன்றாய் போனதாம்
அந்த நேரம் பார்த்துதான் சிங்கம் அங்கே வந்ததாம்
அருகில் வந்த சிங்கமும் மாட்டை தின்ன பார்த்ததாம்
நாலும் ஒன்றாய் அலைவதால் மாட்டை பிரிக்கப் பார்த்ததாம்
கொஞ்ச நேரம் பேசியே சண்டை வர வைத்ததாம்
சன்டை போட்ட மாடது பிரிந்து தனியே போனதாம்
தனித்தனியே வந்ததால் சிங்கம் மாட்டை தின்றதாம்

குரங்கும் குல்லாய் வியாபாரியும்

வீதி தோறும் குல்லாதான் வித்து வந்தான் வியாபாரி
அலைஞ்ச களைப்புத் தீரவே பத்து நிமிடம் தூங்கினான்
கொஞ்ச நேரம் போனது குரங்கு கூட்டம் சேர்ந்தது
ஆளுக்கொரு குல்லாயை அடுத்தடுத்தாய் எடுத்தது
குல்லாய் எடுத்த குரங்கது குதிச்சு குதிச்சு ஆடுது
கண்ணயர்ந்த வியாபாரி கண்விழித்து பார்த்தானே
குல்லாய் இன்றி போகவே குரங்கை நோக்கி ஓடினான்
என்ன செய்தும் குரங்கது குல்லாய் தர மறுத்தது
சற்று நேரம் யோசித்தான் சரியான வழி கிடைத்தது
தலையில் இருந்த குல்லாயை குரங்கை நோக்கி வீசினான்
குல்லா கண்ட குரங்கது கோபத்துடன் பார்த்தது
ஆளுக்கொரு குல்லாயை அடுத்தடுத்து எரிந்தது
குல்லாய் எடுத்த வியாபாரி குரங்கை விடுத்து ஓடினான்

ஆமை-முயல் போட்டி

அன்றொரு நாள் காட்டிலே ஆமைக்கும் முயலுக்கும் போட்டியாம்
உச்சி மலை எல்லையை முதலில் தொட்டால் ஜெயிக்கலாம்
ஹா ஹா-என்று முயலும்தான் ஆமையை பார்த்து சிரித்தது
சிரிப்பைக் கண்ட ஆமையும் கர்வம் வேண்டாம் என்றது
போட்டி தொடங்கிய நேரமே முயல் எடுத்தது வேகமே
பாதி தூரம் வந்ததும் திரும்பி நின்று பார்த்தது
கண்ணுக் கெட்டிய தூரமே காணவில்லை ஆமையை
ஆமை மெதுவாய் வந்ததால் முயலும் கொஞ்சம் தூங்கிச்சு
மெதுவாய் வந்த ஆமையும் முயலை முந்திச் சென்றது
தூங்கி எழுந்த முயல் அது எல்லை நோக்கி ஓடிச்சு
கர்வம் கொஞ்சம் இருந்ததால் அதுவும் தோற்றுப் போனது
எல்லையில் இருந்த ஆமையும் முயலைப் பார்த்து சொன்னது
திறமை அதிகம் இருந்தாலும் கர்வம் மட்டும் வேண்டாமே

சிங்கமும் முயலும்

காட்டில் ஒரு சிங்கம் சுத்தி சுத்தி வந்ததாம்
கண்ணில் பட்ட முயலையெல்லாம் கடிச்சு கடிச்சு தின்னுச்சாம்
கும்பல் கும்பலாய் சாவதாலே முயலும் கூட்டம் போட்டுச்சாம்
கூட்டம் போட்ட முயலும் கூடி கூடி பேசிச்சாம்
கூடிப் பேசி முயல்களும் சிங்கத்திடம் போனதாம்
சிங்க ராஜா சிங்க ராஜா சிந்திச்சுப் பாருங்க
சீக்கிரமே காலியாகிடுவோம் இப்படி தின்னாக்க
தினம் ஒருவரா நாங்க வரோம் சாப்பிட்டுக்கோங்க
நிறைய நாள் சாப்பிடலாம் சொன்னா கேளுங்க
முயலு சொன்ன ஐடியாவும் நல்லா இருந்ததாம்
தினமும் ஒரு முயலை தானே வரச் சொன்னதாம்
முதல வந்த முயலதுவும் நல்லா பேசிச்சாம்
சிங்கத்திடம் தின்ன சொன்னதாம்
என்ன அவசரம் என்று சிங்கம் கேட்டதாம்
உன்னை விட பெரிய சிங்கம் இருக்கு என்றதாம்
எங்கே இருக்கு காட்டு சிங்கம் சொன்னதாம்
கிட்ட உள்ள கிணத்துகிட்ட அழைத்துச் சென்றதாம்
எட்டிப்பாரு பெரிய சிங்கம் இருக்கு என்றதாம்
பார்த்த சிங்கம் தண்ணீரிலே பிம்பம் கண்டதாம்
தன்னைத் தானே பார்த்து அதிக கோபம் கொண்டதாம்
கோபம் கொண்ட சிங்கம் அதுவும் கிணற்றில் பாய்ந்ததாம்
சிங்கம் தொல்லை ஒழிந்ததாலே முயலும் மிகவும் மகிழ்ந்ததாம்

மழை வந்த கதை (ஸ்ரீவித்யா தர்ஷிணிக்காக எழுதியது)

வாத்து ஒன்று குளத்திலே நீந்தி நீந்தி சென்றதாம்.
மாடு ஒன்று வந்து தாகத்தில் தண்ணீரெல்லாம் குடித்ததாம்.
குளத்தின் நீரும் குறைந்து போய்விட்டதாம்.

வாத்து மாடு கிட்ட போய்
`மாடே மாடே எல்லா தண்ணியும் நீ குடிச்சிட்டா
நான் எப்படி நீந்திப் போவேன்அப்படீன்னு கேட்டுதாம்
மாடு அதுக்கு `என் கிட்ட கேக்காதே அந்த மரத்து கிட்ட
போய் கேளுஅப்படீன்னு சொல்லித்தாம்

வாத்து மரத்துக்கிட்ட போய்
`மரமே மரமே மாடு சொல்லிச்சு
எல்லாத் தண்ணியும் நீ குடிச்சிட்டா
நான் எப்படி நீந்திப் போவேன்அப்படீன்னு கேட்டுதாம்
மாடு அதுக்கு `என் கிட்ட கேக்காதே அந்த கடல் கிட்ட
போய் கேளு' அப்படீன்னு சொல்லித்தாம்

வாத்து கடல் கிட்ட போய்
`கடலே கடலே மரம் சொல்லித்து
எல்லா தண்ணியும் நீ குடிச்சிட்டா
நான் எப்படி நீந்திப் போவேன்அப்படீன்னு கேட்டுதாம்
கடல் அதுக்கு `என் கிட்ட கேக்காதே அந்த சூரியன் கிட்ட
போய் கேளுஅப்படீன்னு சொல்லித்தாம்

வாத்து சூரியன் கிட்ட போய்
` சூரியன் சூரியன், கடல் சொல்லித்து, மரமும் சொல்லித்து
எல்லா தண்ணியும் நீ குடிச்சிட்டா
நான் எப்படி நீந்திப் போவேன்அப்படீன்னு கேட்டுதாம்
சூரியன் அதுக்கு `என் கிட்ட கேக்காதே அந்த மேகத்துக்கிட்ட
போய் கேளுஅப்படீன்னு சொல்லித்தாம்
வாத்து மேகத்துக்கிட்ட போய்

` மேகம் மேகம் சூரியன் சொல்லித்து, கடல் சொல்லித்து, மரமும் சொல்லித்து
எல்லா தண்ணியும் நீ குடிச்சிட்டா
நான் எப்படி நீந்திப் போவேன்அப்படீன்னு கேட்டுதாம்
மேகம் அதுக்கு `அப்படியா? இதோ இப்பவே மழையை தரேன்அப்படீன்னு சொல்லித்தாம்.
மழை சோவெனப் பெய்தது. குளம் நிரம்பி, மாடு நனைந்து, மரம் எல்லாம் நனைந்து, கடலும் நிரம்பி, சூரியன் அந்த கடல் நீரை ஆவியாக்கி, மேகமாக ஆக்கியது. மீண்டும் மழை சோவெனப் பெய்தது. அந்த மகிழ்ச்சியுடன் நீந்திச் சென்றது.



.

பம்பரம்

சொக்கன் விட்ட பம்பரம்
சோமு விட்ட பம்பரம்
தலையை ஆட்டிச் சுற்றுது
தரையில் நின்று சுற்றுது
கொண்டையுள்ள பம்பரம்
கொய்யக்கட்டை பம்பரம்
சாட்டை கொண்டு சுற்றலாம்
சவுக்காட்டம் ஆடலாம்
அழகு வண்ண பம்பரம்
அறுபது காசுப் பம்பரம்

ஆனை ஆனை

ஆனை ஆனை அழகர் ஆனை
அழகரும் சொக்கரும் ஏறும் யானை
காட்டுக் கரும்பை முறிக்கும் யானை
காவேரி நீரை கலக்கும் யானை
எட்டித் தேங்காய் பறிக்கும் யானை
குட்டி யானைக்குத் தந்தம் முளைச்சுதாம்
பட்டணமெல்லாம் நடந்து போச்சுதாம்

தவளையாரே

தவளையாரே தவளையாரே எங்கே போகிறீர்
தத்தி தத்தி கிணற்றுப் பக்கம் நடந்து போகிறேன்
நீண்ட நேரம் எதுக்காக சத்தம் போடுறீர்
இரவில் மழை பெய்யுமென்று சேதி சொல்லுறேன்

வணக்கம்

அம்மா, அம்மா முதல் வணக்கம்
அன்பாய் சொல்வேன் தினம் உனக்கு
அப்பா, அப்பா முதல் வணக்கம்
பண்பாய் சொல்வேன் தினம் உனக்கு
குருவே, குருவே முதல் வணக்கம்
பதிந்தே சொல்வேன் தினம் உனக்கு
இறைவா, இறைவா முதல் வணக்கம்
எழுந்ததும் சொல்வேன் தினம் உனக்கு