தஞ்சாவூரு பொம்மை

தஞ்சாவூரு பொம்மைதான்!
தலை ஆட்டும் பொம்மைதான்!
எந்தப் பக்கம் சாச்சாலும்

எழுந்து நிற்கும் பொம்மைதான்!
வண்ண வண்ண பொம்மைதான்!
வடிவம் உள்ள பொம்மைதான்!

கண்ணைக் கவரும் பொம்மைதான்!
கருத்தில் நிலைக்கும் பொம்மைதான்!
எந்தத் திசையில் விழுந்தாலும்

எழுந்தே நிற்போம் பொம்மைபோல்!
நம்பி வாழ்வோம் உலகத்தில்
நாளை வெற்றி நமதாகும்!



.

நல்ல குரங்கினம்

மனிதன் போல இருக்குது
மரத்தின் மேலே ஏறுது
கனியும் காயும் தின்னுது
காடு மலையில் வாழுது
இனிக்கும் கரும்பை ஒடிக்குது
இன்ப மாகத் தின்னுது
மனித னுக்கு வாலில்லை
மந்தி குரங்கைப் போலவே
கூட்டம் கூட்ட மாகவே
கூடி வாழும் குரங்கினம்
ஆட்டம் பாட்டம் போடுமே
ஆலம் விழுதில் தொங்குமே
ஓட்ட மாக ஓடியே
ஒன்றை யொன்று பிடிக்குமே
நாட்டித் தடியை ஓங்கவே
கடிக்கப் பாயும் நம்மையே

யானையும் குட்டி குழந்தைகளும்

டிங் டாங் மணியோசை
தெரு முனையில் கேட்குது
அங்கே ஒரு யானை
அசைந்து அசைந்து வருகுது

அசைந்து வரும் யானையைப் பார்க்க
அன்பு பாப்பாக்கள் குவியுது

ஆளுக்கு ஒரு காசு
அதன் கையில கொடுக்குது

கேள்விக் குறிபோல்
கையைத் தூக்கி

காசு தந்த பாப்பாவுக்கு
சலாம் ஒன்று போடுது

அகன்று செல்லும் வேளையில்
நாசுக்காய் கொஞ்சம் பிளிறுது
பிளிறும் சத்தம் கேட்டு
பிஞ்சுகள் சிலது அலறுது
அலறிய பிள்ளையைப் பார்த்து
அடுத்தது கைகொட்டி சிரிக்குது
டிங்டாங் மணியோசை இப்போ
தெருக்கோடியில் முடிஞ்சது

பள்ளிக் கூடம் போகலாமே

பள்ளிக் கூடம் போகலாமே
சின்ன பாப்பா -நிறைய
பிள்ளைக ளோட பழகலாமே
சின்ன பாப்பா!

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
சின்ன பாப்பா -கல்வித்
தோட்டம் அந்த பள்ளிக் கூடம்
சின்ன பாப்பா!


பள்ளிக் கூடம் திறந்தாச்சி
சின்ன பாப்பா -உனக்கு
நல்ல நேரம் பிறந்தாச்சி
சின்ன பாப்பா!

வீட்டுச் செய்தி கதைகள் பேசி
பொழுது போக்கலாம் -அட
ஏட்டுக் கல்வி பாடம் கூட
எழுதிப் பார்க்கலாம்!


உடலும் மனமும் வளர்வதர்ற்கு
சின்ன பாப்பா -ஏற்ற
இடமே இந்தப் பள்ளிக் கூடம்
சின்ன பாப்பா!

பள்ளிக் கூடம் போகலாம் வா
சின்ன பாப்பா -நிறைய
பிள்ளைக ளோட பழகலாம் வா
சின்ன பாப்பா!