ஒன்று ரெண்டு மூன்று நாலு

ஒன்று ரெண்டு மூன்று நாலு ஐந்து ஆறு ஏழு
எட்டு ஒன்பது பத்து என்று எண்ணுவோமே நாங்கள்.
ரெண்டுசதம் கொண்டுசென்று மூன்றுகடை தேடி
நாலுபழம் வாங்கிக்கொண்டு நாங்கள்வரும் வழியில்
ஐந்துபெரும் நாய்குலைத்து ஓடிவர நம்மை
தேடிஆறு கல்லெடுத்து தீட்டிவிட்டோ மெல்ல
உருண்டுருண்டு சிரித்துக்கொண்டு ஏழுபேரு மாக
எட்டுமணி வண்டியிலே உல்லாசமாய் ஏறி
ஒன்பதுக்குள் வீடுசென்று உணவருந்தி நாமும்
பத்துமணி அடிப்பதற்குள் படுத்துறங்கி னோமே.

நிலா

வட்ட நிலா சுற்றிச்சுற்றி வானில் ஒடுது
வா வென்றே நானழைத்தால் வர மறுக்குது!
எட்டி எட்டிப் பார்த்தாலுமே எட்டப் போகுது
ஏனென்று கேட்டால் அது சிரித்து மழுப்புது"

மயிலே குயிலே

ஆடிக்களிக்கும் மயிலே வா
ஆட்டம் எனக்குச் சொல்லித்தா

ஓடித்திரியும் இளங்கன்றே வா
அம்மா என்று சொல்லித்தா!

பறந்து திரியும் காக்கா வா
பகிர்ந்துண்ண சொல்லித்தா!

பாடிக் களிக்கும் குயிலே வா
பாட்டுப் பாடச் சொல்லித்தா

தாவும் மானே அருகே வா
தாவிக் குதிக்கச் சொல்லித்தா

கூவும் கோழி இங்கே வா
கூவி எழுந்திடச் சொல்லித்தா!

தாவித் திரியும் அணிலே வா
பழம் பறிக்கச் சொல்லித்தா!

குதித்து ஓடும் முயலே வா
கூடி வாழ சொல்லித்தா!

கிள்ளை மொழி பேசும் கிளியே வா
பிள்ளைத்தமிழ் சொல்லித்தா!

வாலை ஆட்டும் நாய்க்குட்டியே வா
வீட்டை காக்க  கற்றுத்தா!

கொழுக்கட்டை

கொழுக்கட்டையே கொழுக்கட்டையே ஏ(ன்) வேகல?
மழயும் பேஞ்சிச்சு நா வேகல
மழயே மழயே ஏம் பேஞ்சிங்க?
புல்லு மொளைக்க நாம் பேஞ்சேன்
புல்லே புல்லே ஏம் மொளச்சிங்க?
மாடு திங்க நா மொளச்சேன்
மாடே மாடே ஏந் தின்னீங்க?
பாலு கறக்க நாந் தின்னேன்.
பாலே பாலே ஏங் கறந்தீங்க?
பால்காரர் கறந்தார் நா கறந்தேன்.
பால்கார்ரே பால்காரரே ஏங் கறந்தீங்க?
அம்மா சொன்னாங்க நாங் கறந்தேன்.
அம்மா அம்மா ஏஞ் சொன்னீங்க?
பாப்பா அழுதுச்சு நாஞ் சொன்னேன்.
பாப்பா பாப்பா ஏ அழுதீங்க?
எறும்பு கடிச்சுச்சு நா அழுதேன்.
எறும்பே எறும்பே ஏங் கடிச்சீங்க?
எங்க புத்துக்குள்ள கைய வுட்டா சும்மாருப்பமோ?

பசுவே பசுவே

பசுவே பசுவே பால் தருவாய்
பச்சைப் புல்லை நான் தருவேன்

பாலைத் தந்தால் காய்ச்சிடுவேன்
பதமாய்க் கோவா செய்திடுவேன்

மாலை நேரம் நண்பருடன்
மகிழ்ந்தே அதனை உண்டிடுவேன்!

குட்டிக் குட்டிக் கண்ணா

குட்டி குட்டி கண்ணனாம்
குறும்பு செய்யும் கண்ணனாம்
கண்ணடிக்கும் கண்ணனாம்
கண் கவரும் கண்ணனாம்

முத்துப் பல் கண்ணனாம்
முத்தம் தரும் கண்ணனாம்
குழலூதும் கண்ணனாம்
குஷியாக்கும் கண்ணனாம்

மயிலிறகுக் கண்ணனாம்
மனம் மயக்கும் கண்ணனாம்
கொஞ்சிப் பேசும் கண்ணனாம்
கொட்டம் செய்யும் கண்ணனாம்

வெண்ணை தின்னும் கண்ணனாம்
வெள்ளை உள்ளக் கண்ணனாம்
வீரமுள்ள கண்ணனாம்
வெற்றி பெரும் கண்ணனாம்

ஞானமுள்ள கண்ணனாம்
நன்மை செய்யும் கண்ணனாம்
மாடு மேய்த்த கண்ணனாம்
மாசு போக்கும் கண்ணனாம்

பாட்டுப் பாடும் கண்ணனாம்
பாவம் போக்கும் கண்ணனாம்
ஆட்டம் போடும் கண்ணனாம்
ஆனந்தக் கண்ணனாம்

மனம் மகிழ போற்றுவோம்
மாலைகள் பல சாற்றுவோம்
அவன் புகழை பாடுவோம்
ஆனந்தக் கூத்தாடுவோம்

இந்தப் பாடலை எழுதியவர்:
நன்றி சகோதரா!