எந்தக் கிழமையில் நீ பிறந்தாய்

ஞாயிற்றுக் கிழமை பிறந்த பிள்ளை
நன்றாய்ப் பாடம் படித்திடுமாம்.

திங்கட் கிழமை பிறந்த பிள்ளை
தினமும் உண்மை பேசிடுமாம்.

செவ்வாய்க் கிழமை பிறந்த பிள்ளை
செய்வதை ஒழுங்காய்ச் செய்திடுமாம்.

புதன் கிழமை பிறந்த பிள்ளை
பூமியில் மரங்கள் வளர்த்திடுமாம்

வியாழக் கிழமை பிறந்த பிள்ளை
வீரமாய் நாட்டைக் காத்திடுமாம்.

வெள்ளிக் கிழமை பிறந்த பிள்ளை
வேண்டும் உதவிகள் செய்திடுமாம்.

சனிக் கிழமை பிறந்த பிள்ளை
சாதனைகள் புரிந்திடுமாம்.

இந்தக் கிழமைகள் ஏழுக்குள்
எந்தக் கிழமையில் நீ பிறந்தாய்?

அலமு: ஞாயிற்றுக் கிழமை நான்பிறந்தேன்.
நன்றாய்ப் பாடம் படித்திடுவேன்.

அழகப்பன்: திங்கட் கிழமை நான்பிறந்தேன்.
தினமும் உண்மை பேசிடுவேன்.

(இப்படியே ஒவ்வொரு குழந்தையும் அவரவர் பிறந்த கிழமைக்கு ஏற்றபடி பதில் கூறலாம்.)

.

காட்டில் ஒரு திருமணம்

அம்மா

அம்மா அம்மா வருவாளே
அன்பாய் முத்தம் தருவாளே
தும்மும் போது நூறென்பாள்
துணைக்கு என்றும் நானென்பாள்
கட்டி பிடித்து அணைத்தாலும்
காலால் எட்டி உதைத்தாலும்
சுட்டித் தனங்கள் செய்தாலும்
சொந்தம் நமக்கு அம்மாவே!
பாலும் சோறும் ஊட்டிடுவாய்
பாட்டும் பாடிக் காட்டிடுவாய்
தொட்டிலி(ல்) இட்டுத் தாலாட்டித்
தூங்கச் செய்வாய் எந்தனையே
கண்ணை இமை காப்பதுபோல்
காத்து என்னை வளர்த்திடும்
அன்னை உனைப்போல் இவ்வுலகில்
ஆரும் இல்லை இல்லையே!


-கவிஞர்.த.துரைசிங்கம்

மரப்பாச்சிக்குக் காய்ச்சலடி

மரப்பாச்சிக்குக் காய்ச்சலடி
மாளவில்லை வேலை தொல்லை
பசுவும் வெளியே காத்திருக்க
பால் கறக்க நேரமில்லை
கண்கள் இரண்டும் சொக்கிப் போச்சு
கால்கள் இரண்டும் மருகிப் போச்சு
வைத்தியரும் அருகே இல்லை
வகை ஒன்றும் தெரியவில்லை
இடிச்ச இஞ்சிச் சாறெடுத்து
இம்மி மிளகு உடன் சேர்த்து
சுக்குக் கசாயம் போட்டேனடி
சுரமும் காத்தாய்ப் பறந்து போச்சு.

மிருகக் காட்சி சாலை

அம்மா அப்பா அழைத்துச் சென்றார் அங்கே ஓரிடம்
அங்கிருந்த குயிலும் மயிலும்  ஆடத் தொடங்கின
பொல்லா நரி புனுகுப் பூனை எல்லாம் இருந்தன
குட்டி மான்கள் ஒட்டைச்சிவிங்கி கூட நின்றன
குரங்கு என்னைப் பார்த்துப் பார்த்து குர் குர் என்றது
யானை ஒன்று காதைக் காதை ஆட்டி நின்றது
முதலைத் தலையைத் தூக்கி மூச்சு விட்டது
கரடி கூட உறுமிக் கொண்டே காலைத் தூக்கிற்று
சிங்கம் புலி எல்லாம் கண்டேன் கண்டும் பயமில்லை
சூரனைப் போல் நின்றிருந்தேன் சிறிதும் அஞ்சவில்லை
சென்று வந்த இடம் உனக்குத் தெரியவில்லையா?
மிருகக் காட்சி சாலைதானே வேறு ஒன்றுமில்லை!

.