கோபக்கார மேகங்கள் by Jeeves Aiyappan
அது நல்ல பசுமையான கிராமம். அந்த கிராமத்துல எப்பவுமே தண்ணிக்குப் பஞ்சம் வந்ததில்லை. மக்களும் நன்றி மறக்காம அந்த கிராமத்துக்கு மழை தரும் மேகங்களுக்கு வருஷா வருஷம் பூஜை பண்ணி நன்றிய தெரிவிப்பாங்களாம். ஒரு முறை என்னாச்சுன்னா, நல்ல மழை, நல்ல விளைச்சல் இருக்கிறதால அந்த ஊர் மக்களுக்கு கர்வம் வந்துட்டது. எதுக்கு மேகத்தைக் கொண்டாடனும்னு அந்த வருஷம் பூசையே பண்ணல. விவசாயம் பாக்காம விளைஞ்சிருந்த நிறைய மரங்களை வெட்டி வித்து வாழ்க்கை நடத்தினாங்க.
மேகங்கள் எல்லாம் வழக்கமா பூஜை நடக்கிற நாள் பார்த்து இன்னைக்கு நமக்கு பூஜை பண்ணுவாங்கன்னு காத்துட்டு இருந்தது. ஒரு நாள் , அடுத்த நாள், அதற்கு அடுத்த நாள்னு காத்துட்டே இருந்தது. மரங்களும் இல்லை, கூடவே யாரும் பூஜை பண்ணாததால, மேகங்கள் எல்லாம் ஒண்ணு கூடி இனி மழையே பெய்யக் கூடாது இந்த ஊருக்குன்னு முடிவு பண்ணிடுச்சுங்க. அதனால எல்லா மேகங்களும் கலைஞ்சு போயி வெளியிடத்துல மழை பெஞ்சுட்டு இங்க வெறும் மேகமா வந்துடும். அப்புறம் மழை தரும் மேகங்கள் எல்லாம் அந்த ஊரை விட்டு விலகி வெளியூருக்குப் போயிட்டது.
இப்படியே போனதால அந்த கிராமத்துல தண்ணி தட்டுப் பாடு வந்துட்டது. மரங்கள் இல்லாததால புதுசா எந்த மேகம் இந்த ஊர் பக்கம் வந்தாலும் நிக்காம வேற இடத்துக்குப் போய்ட்டே இருந்தது. பழைய மேகங்களும் வராததால மழை சுத்தமா நின்னுப் போச்சு. ஊரே வரண்டு போச்சு. மழையே இல்லைன்னா இதானே ஆகும்? அதனால அங்க இருந்த கொஞ்சம் நஞ்சம் பயிர்கள் எல்லாம் காஞ்சு போச்சு. அடுத்து மழை வந்தா தான் பயிர் வைக்க முடியும். ஆனா ஊர் காரங்க இனி மழை வராதுன்னு எல்லாரும் விசனப் பட்டுக்கிட்டே வீட்டுல இருந்தாங்க. மரங்கள் வெட்ட மீதி இல்லாததால சிலரு வெளியிடத்துக்குப் போயி சம்பாதிச்சுட்டு வந்தாங்க.
ஆனா ஒரு தாத்தா மட்டும் வழக்கம் போல தோளில கலப்பை எடுத்துக்கிட்டு உழுதுட்டே இருந்தார். அந்த நேரத்துல ஊர் காரங்க கேலி பேசுனாங்க. இனிமே மழை வராது எதுக்கு இப்படி தானியத்தை வீணாக்கறீங்கன்னு.
தாத்தா சொன்னாரு, உழைப்பு என்னைக்குமே வீணாகாது. கண்டிப்பா இது நல்ல விளைச்சல் தரும்னு சொல்லிட்டு அவர் பாட்டுக்கு உழுதுட்டே இருந்தாரு. யாரும் உதவிக்கு வரவே இல்லை.
அப்ப இந்த ஊரில இருந்து வெளியூருக்குப் போன பழைய மேகக்கூட்டத்தில பெரிய மேகம் சின்ன மேகத்துக்கிட்ட சொல்லிட்டு இருந்துச்சாம். முதல்ல நாம இருந்த ஊர்ல எவ்வளவு மழை பெஞ்சும் என்ன, நம்மளுக்கு மரியாதை குடுக்கலையேன்னு. அதுக்கு மத்த மேகங்கள் சொல்லுச்சாம், சரி நாம மழை பெய்யாம விட்டுட்டோம்ல, இனி எப்படி இருக்கு அந்த ஊருன்னு ஒரு முறை போய் பாத்துட்டு வந்துடலாம்னு. சரின்னு எல்லா மேகமும் கிளம்பி வந்து பாத்தா ஊரே அழியற மாதிரி இருக்கு. திரும்பி போகலாம்னு மேகங்கள் திரும்பும் போது, குட்டி மேகம் ஒண்ணு தாத்தா உழுதுட்டிருந்த நிலம் பக்கம் பாத்துச்சாம். இரக்கப் பட்டு அழுதுடுச்சாம்.
குட்டி மேகம் அழறதப் பாத்து மத்த மேகம் அங்க வந்து பாக்க, எல்லா மேகத்துக்கும் அழுகை வந்துடுச்சாம். அதனால அந்த தாத்தா நிலத்துக்கு மட்டும் நல்ல மழை பெஞ்சதாம். தாத்தா கையெடுத்து மேகத்தை கும்பிட்டுட்டு தன் வேலைய பாக்க ஆரம்பிச்சாராம். அந்த வருஷம் தாத்தாவோட நிலத்துல நெறைய விளைச்சல். அதைப் பாத்த கிராம மக்களுக்கு புத்தி வந்துச்சாம். இனிமே நாம உழைக்கறத நிறுத்தக் கூடாது. அதே போல இயற்கையையும் போற்றிப் பாதுகாக்கனும். மரத்தைப் பாதுகாக்கனும்னு முடிவு பண்ணி கடுமையா உழைக்க ஆரம்பிச்சாங்க. இவங்க திரும்பவும் உழைக்கறத பார்த்ததும் மேகங்கள் எல்லாம் ஊர்க்காரங்க தவறை மன்னிச்சு மறுபடியும் அதே ஊருக்கு வந்துட்டுது. அதுக்கப்புறம் அந்த ஊர்ல பஞ்சமே வரலை. எல்லாரும் சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்காங்க.
1 comments:
ரொம்ப காலம் முன்னாடி கேட்ட கதை #ஞாபகம் வருதே
Post a Comment