Dr Poovannan
|
மூலம்: 17-9-1949 தேதியிட்ட பாலர் மலர் பத்திரிக்கை
புத்தகம் தந்துதவிய கிங் விஸ்வா-வுக்கு நன்றி. இவரைப் பற்றிச் சொன்ன பலா பட்டறை ஷங்கருக்கும் நன்றி. :)
========== ========== ========== ========== ========== ========== ==========
1. நான் எத்தனை தரம் சொல்லியிருக்கிறேன். முனுசாமியோடு சேராதே சேராதே என்று? மறுபடியும் அவனோடு போய்ச் சேருகிறாயே! அவனோ கூலி வேலை செய்யும் குப்புசாமியின் மகன். நீயே பணக்காரப் பார்த்தசாரதியின் மகன். நீ எங்கே? அவன் எங்கேடூ இனிமேல் என் அந்தஸ்துக்குத் தகுந்த இடத்தில்தான் நீ சிநேகம் செய்யவேண்டும், தெரியுமா?" என்று மணிவண்ணன் முதுகில் 'பளிச் பளிச்' என்று இரண்டு வைத்துவிட்டு வெளியே சென்றார்., அவனது அப்பா பார்த்தசாரதி.
அப்பாவின் செய்கை மணிவண்ணனுக்குப் பிடிக்கவில்லை. தன் அன்பார்ந்த நண்பன் முனுசாமியை மறந்து அவனால் எப்படி இருக்கமுடியும்? அவனது அன்பை அப்ப இன்னும் நன்கு உணரவில்லை. இது அவன் தவறா?
2. மாலை மணி 4 அடித்தது. மணிவண்ணன் படிப்பதை நிறுத்தினான். எப்போதும்போல முனுசாமியுடன் விளையாடச் செல்லலாமா, வேண்டாமா என்று யோசித்தான். 'அப்பா அடிப்பாரே' என்று முதலில் பயந்தான். ஆனால் அவனுடைய அன்பு, அந்தப் பயத்தை விரட்டி விட்டது. அவசியம் போகத்தான் வேண்டும் என்று தூண்டியது. உடனே, வீட்டை விட்டுப் புறப்பட்டான், மணிவண்ணன். வழக்கமாக விளையாடும் இடத்துக்கு வந்தான்.
3. பார்த்தசாரதி எங்கேயே போய்விட்டு, வீட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார். வீட்டுக்குச் செல்லும் வழியில்தான் விளையாட்டு மைதானம் இருந்தது. அந்த மைதானத்தின் அருவே வந்ததும், அவர் நின்றார். "நாம் காலையில் கொடுத்த உதையில் அவன் முனுசாமியோடு சேரவே மாட்டான்" என்று எண்ணினார். இருந்தாலும், அவன் இருக்கிறானா என்று பார்ப்பதற்காக அந்த மைதானத்திற்குள் புகுந்தார்.
அங்கு அவர் கண்ட காட்சி அவரைத் திடுக்கிடச் செய்தது! ஒரு மரத்தடியில் முனுசாமியும் மணிவண்ணனும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதைக் கண்டார்! மெதுவாக அந்த மரத்தின் பின்னால் சென்று நின்றுகொண்டு, அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று உற்றுக்கேட்டார்.
"முனுசாமி, எங்கப்பா என்னை அடித்தாலும் சரி, கொன்றாலும் சரி, உன்னை விட்டுப் பிரியவே மாட்டேன், நம்முடைய அன்பு ஒருநாளும் குறையவே மாட்டாது" என்று உறுதி தொனிக்கும் குரலில் மணிவண்ணன் கூறினான். பார்த்தசாரதி அதைக்கேட்டார். அப்போதுதான் அவர்களது அன்பின் பெருமையை அவர் உணர்ந்தார். உடனே அவர் மனம் மாறியது.
"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்" என்ற திருவள்ளுவரின் திருவாக்கு அவருக்கு அப்போது ஞாபகத்துக்கு வந்தது.
வழக்கம்போல, மணிவண்ணனை அடித்து இழுத்துச் செல்லாமல் பேசாமல் வீட்டுக்குச் சென்று விட்டார். அன்று முதல், மணிவண்ணன் முனுசாமியோடு சேருவதை அவர் தடுப்பதே இல்லை!
========== ========== ========== ========== ========== ========== ==========
என் மகனே, அன்புக்கு தோல்வி என்பதே கிடையாது. இன்றோ, நாளையோ அல்லது பல யுகங்களுக்குப் பிறகோ அன்பு வெற்றி பெறுதல் நிச்சயம். உன் சகோதரர்களிடம் உனக்கு அன்பு உண்டா - சுவாமி விவேகானந்தர்
========== ========== ========== ========== ========== ========== ==========
0 comments:
Post a Comment