மயிலே குயிலே

மயிலே, மயிலே ஆடிவா
மக்காச் சோளம் தருகிறேன்!
குயிலே, குயிலே பாடிவா
கோவைப் பழங்கள் தருகிறேன்!

பச்சைக் கிளியே பறந்துவா
பழுத்த கொய்யா தருகிறேன்!
சிட்டுக் குருவி நடந்துவா
சட்டை போட்டு விடுகிறேன்!

ஓடைக் கொக்கு இங்கே வா
ஓடிப் பிடித்து ஆடலாம்!
மாடப் புறாவே இறங்கிவா
மடியில் குந்திப் பேசலாம்!

இளநீர்

தென்னை மரத்து இளநீரூ -நல்ல
தேன்போல இனிக்கும் சுவைநீரு
என்றும் எங்கும் கிடைத்திடுமே -தினம்
ஏற்றுக் குடித்தால் நலம் தருமே!

பானத்தில் இளநீர் அரியவகை -எந்த
காலமும் நமக்கு நல்ல துணை
விலையோ ஒன்றும் அதிகமில்லை -இங்கு
இதுபோல் பானம் வேறு இல்லை.

இயற்கை தந்தது இளநீரு -நல்ல
இன்சுவை தந்திடும் இளநீரு
உடலின் வெப்பம் தணித்திடுமே -நம்
உள்ளம் தனிலே நிறைந்திடுமே!

கொத்துக் கொத்தாய் காய்த்திடுமே -நம்
அனைவரின் தாகம் தீர்த்திடுமே!
அனைவரும் நாளும் குடித்திடலாம் -வரும்
ஆனந்தம் தனிலே திளைத்திடலாம்!

நன்றி: முத்தமிழ்மன்றம்

அஆஇஈ

அ - இது ஓர் அத்திப்பழம்
ஆ - எம்பவன் ஆசைப்பட்டான்
இ - என்பவன் இதோ என்றான்
ஈ - என்பவன் ஈ என்றான்
உ - என்பவன் உரி என்றான்
ஊ என்பவன் ஊது என்றான்
எ என்பவன் எனக்கு என்றான்
ஏ என்பவன் ஏது என்றான்
ஐ என்பவன் ஐயா என்றான்
ஒ என்பவன் ஒன்று என்றான்
ஓ என்பவன் ஓடி விட்டான்
ஔ என்பவன் கௌவிக் கொண்டான்

வானத்திலே திருவிழா

கவிஞர் முனைவர் பொன்.செல்வகணபதி

வானத்திலே திருவிழா!
வழக்கமான ஒருவிழா
இடிஇடிக்கும் மேகங்கள்
இறங்கி வரும் தாளங்கள்!
மின்னலொரு நாட்டியம்
மேடை வான மண்டபம்
தூறலொரு தோரணம்
தூய மழை காரணம்!
எட்டுதிசை காற்றிலே
ஏக வெள்ளம் ஆற்றிலே!
தெருவிலெல்லாம் வெள்ளமே
திண்ணை யோரம் செல்லுமே!
தவளை கூடப் பாடுமே
தண்ணீரிலே ஆடுமே!
பார்முழுதும் வீட்டிலே
பறவைகூட கூட்டிலே!
அகன்ற வெளி வேடிக்கை
ஆண்டுதோறும் வாடிக்கை!

குட்டி எலியும் சிங்கமும்

குட்டி எலி அன்றொரு நாள்
குதிச்சு குதிச்சு ஓடிச்சாம்!
யானை, புலி, சிங்கம் காண
ஆசை கொண்டு ஓடிச்சாம்!
உயரமான மரத்தில் ஏறி
உலகமெல்லாம் பார்த்ததாம்!
தூரத்திலே சிங்கம் ஒன்று
தூங்குவதைப் பார்த்ததாம்!
மளமள என்று இறங்கி
அது மகிழ்ச்சியுடன் ஓடிச்சாம்!
மேலும் கீழும் பார்த்து
அதன் மீசையை பிடித்து இழுத்ததாம்!
வளைய வளைய வந்து
அதன் வாலைப் பிடித்து இழுத்ததாம்!
கோபம் கொண்டு எழுந்த சிங்கம்
குட்டி எலியைப் பிடித்ததாம்!
கையில் பிடித்த எலியை அது
கடித்து தின்ன பார்த்ததாம்!
கை கூப்பி குட்டி எலியும்
கருணை கருணை என்றதாம்!
மண்டியிட்டு குட்டி எலியும்
மன்னிப்பு என்றதாம்!
பெரிய மனசு பண்ணி சிங்கம்
பிழைத்துப்போ என்றதாம்!
விடுவிடு என்று நடந்த சிங்கம்
வேடன் வலையில் விழுந்ததாம்!
அது கர்ஜித்து அழுத ஓசை
காடு முழுதும் கேட்டதாம்!
எங்கோ கேட்ட குரல் என்று
குட்டி எலியும் வந்ததாம்!
சிங்கம் சிக்கியிருந்த வலையை அது
சின்னாபின்னமாய் கடித்ததாம்!
வெளியில் வந்த சிங்கம் எலியிடம்
நன்றி நன்றி என்றதாம்!
செய்த நன்றி மறவேன் என்று
சின்ன எலியும் சொன்னதாம்!

எறும்பு

சின்னச் சின்ன எறும்பே
சிங்கார சிற்றெறும்பே!
உன்னைப் போல நானுமே
உழைத்திடவே வேனுமே!
ஒன்றன் பின்னே ஒன்றாய்
ஊர்ந்து போவீர் நன்றாய்!
நன்றாய் உம்மைக் கண்டே
நடந்தால் நன்மை உண்டே
-பேராசிரியர் கா நமச்சிவாயர்

குண்டு பையன் சுண்டு

குண்டு பையன் சுண்டுவாம்
சுவரின் மேலே உட்கார்ந்தான்.
சுண்டு கீழே விழுந்தானே
துண்டு துண்டாய் ஆனானே.
ஒண்ணா சேர்க்க முடியலையாம்.
ராஜா வந்தும் முடியலையாம்.
ராணுவம் வந்தும் முடியலையாம்!

பள்ளி செல்வோம்

குதித்துக் குதித்து ஓடும்
குதிரை அதோ பாராய்
அசைந்து அசைந்து செல்லும்
ஆனை இதோ பாராய்
பறந்து பறந்து போகும்
பருந்து அதோ பாராய்
தத்தித் தத்திப் போகும்
தவளை இதோ பாராய்
துள்ளித் துள்ளி நாமும்
பள்ளி செல்வோம் வாராய்

மாடிவீட்டுத் தாத்தா

மாடிவீட்டுத் தாத்தாவுக்கு
காடு போலத் தாடியாம்
மாடி மேலே நிற்கும் போதும்
தாடி மண்ணில் புரளுமாம்

ஆந்தை இரண்டு, கோழி, மைனா
அண்டங்காக்கை குருவிகள்
பாந்தமாகத் தாடிக்குள்ளே
பதுங்கிக் கொண்டிருந்தன

உச்சி மீது நின்ற தாத்தா
உடல் குலுங்கத் தும்மினார்
அச்சு அச்சு என்ற போது
அவை அனைத்தும் பறந்தன.

பொம்மை

பொம்மை பொம்மை பொம்மை பார்
புதியப் புதிய பொம்மை பார்
கையை வீசும் பொம்மை பார்
கண்ணைச் சிமிட்டும் பொம்மை பார்
தலையை ஆட்டும் பொம்மை பார்
தாளம் போடும் பொம்மை பார்
எனக்குக் கிடைத்த பொம்மை போல்
எதுவும் இல்லை உலகிலே
--தணிகை உலகநாதன்

எங்கள் தாய்நாடு

பாரதம் எங்கள் தாய்நாடு
பாரில் உயர்ந்த பொன்நாடு
யாரும் கூடித் தோழர்களாய்
இன்பம் காணும் திருநாடு
வடக்கே இமய மலை எல்லை
வணங்கும் குமரி தென் எல்லை
கேள் நீ இதற்கு நிகர் இல்லை
எத்தனை மதங்கள் இந்நாட்டில்
எத்தனை மொழிகள் இந்நாட்டில்
எத்தனை இனங்கள் இந்நாட்டில்
எனினும் நாம் ஒரு தாய் மக்கள்

தமிழ் மாதங்கள்

சித்திரை முதல் மாதமது
சென்ற பின் வைகாசி
ஆனி மூன்றாக வரும்
ஆடியோ நான்காகும்
பொன் போல் ஆவணியாம்
அது போன பின் புரட்டாசி
ஐப்பசி கார்த்திகையாம்
அவள் அக்காள் தங்கைகளாம்
மார்கழி மாதமாம் அது
மாதங்களின் தலையாகும்
தை ஒரு மாதமாகும்
அது தமிழர்களின் திருநாளாம்
மாசி பதினொன்றாகும்
அதன் மகளே பங்குனியாம்
மாதங்கள் பன்னிரண்டு
தமிழ் மக்களின் ஓராண்டு

உயரே போகுது பட்டம்

உயரே போகுது பட்டம்
உயரே போகுது
காற்றின் உதவி இருப்பதாலே
உயரே போகுது
மேலே போன பட்டம்
ஒரு நாள் கீழே வந்தது
செருக்கு வேண்டாம் என்றொரு
பாடம் சொல்லித் தந்தது

உடல் உறுப்புக்கள்

கண்ணிருக்கு கண்ணிருக்கு
காண்பவர் உள்ளம் களிப்பதற்கு
காதிருக்கு காதிருக்கு
நல்லவை யாவும் கேட்பதற்கு
இனிமை தரும் வார்த்தைகளைச்
சொல்லிடத்தானே வாயிருக்கு
நறுமணத்தை நுகர்வதற்கு
இயற்கை தந்த மூக்கிருக்கு
கையிருக்கு கையிருக்கு
பிறருக்கு உதவி புரிவதற்கு
காலிருக்கு காலிருக்கு
நல்லதைத் தேடி நடப்பதற்கு
நம்முடைய உறுப்புக்களை
நலமாய் நாமும் காத்திடுவோம்

நல்லப்பாப்பா

நல்லப்பாப்பா நல்லப்பாப்பா எங்கப்பாப்பா
சொல்லும் சொல்லைக் கேட்டு நடப்பாள் எங்கப்பாப்பா
தாத்தா பாட்டி அம்மா அப்பா தாங்கும் பாப்பா
திருக்குறள் காட்டும் பாதை வழியே நடக்கும் பாப்பா

பச்சைக் கிளியே வா வா

பச்சைக் கிளியே வா வா
பாலும் சோறும் உண்ண வா
கொச்சி மஞ்சள் பூச வா
கொஞ்சி விளையாட வா

தங்கக் குடமே தாராவே

தங்கக் குடமே தாராவே
தட்டான் வீட்டுக்குப் போகாதே
தட்டான் வந்தாப் பிடிப்பான்
தராசுல போட்டு நெறுப்பான்
காசு எங்கேன்னு கேப்பான்
இல்லைன்னு சொன்னா அடிப்பான்

காய்கறிகள்

குண்டு குண்டு கத்திரிக்காய்
விரலு போல வெண்டைக்காய்
பாம்பு போல புடலங்காய்
கசக்கும் நல்ல பாகற்காய்
குட்டி குட்டி கோவற்காய்
கொடியில் காய்க்கும் சுரைக்காய்
பெரிய பெரிய பூசணிக்காய்
புளிக்கும் இந்த மாங்காய்
சிகப்பு நிற கேரட்டு
இனிக்கும் இந்த பீட்ரூட்டு
விதவிதமாய் காய்கறி
வாங்கி வருவோம் கடையிலே

சேமிப்பு

கோடைக்காலம் வந்ததாம்
கோடி எறும்பு போகுதாம்
தலையில் உணவைத் தூக்கியே
தரையில் நடந்து போகுதாம்
பாதி உணவைத் தின்றதாம்
மீதி பாதி சேர்த்ததாம்
மழைக்காலம் வந்ததாம்
மாரி அதிகம் பெய்ததாம்
வெளியில் செல்ல முடியாமல்
சேர்த்த உணவைத் தின்றதாம்
எறும்புக் கூட்டம் போலவே
எதிர்காலத்திற்கு சேர்ப்போமே!

ஆசிரியர்

பாடம் கற்றுத் தருவாரே
பண்பாய் வாழச் செய்தாரே
ஒழுக்கம் கற்றுத் தருவாரே
ஒழுங்காய் வாழச் செய்தாரே
அன்பு செய்ய சொன்னாரே
அழகாய் பேசச் செய்தாரே
கருணை காட்டச் சொன்னாரே
கவிதைப் பாடச் செய்தாரே
தப்பு செய்தால் அடிப்பாரே
திரும்பச் செய்யாமல் தடுப்பாரே
ஏணிப் போலே இருப்பவரே
எங்களை ஏற்றி விட்டாரே
அறிவை வளர்த்த ஆசிரியரே
ஆயிரம் நன்றி கூறுகிறோம்

நேரு மாமா

நேரு மாமா நல்லவராம்
நேர்மை மிக்க தலைவராம்
ரோஜாப் பூவை அணிந்தவராம்
குழந்தைகள் அன்பை பெற்றவராம்
எளிமையாக வாழ்ந்தவராம்
எளிமையாக இருந்தவராம்
தியாக வாழ்க்கை வாழ்ந்தவராம்
திறமையான வல்லவராம்
குறும்புச் சிரிப்புச் சிரிப்பவராம்
குழந்தை மனது உள்ளவராம்

தாத்தா

நாளும் என்னை பள்ளிக்கு
கூட்டிச் செல்லும் தாத்தா
நல்ல நல்ல பண்டங்கள்
வாங்கித் தரும் தாத்தா
தூங்கும் முன்னே இரவினிலே
கதைகள் சொல்லும் தாத்தா
தூக்கி என்னை செல்லமாய்
கொஞ்சி மகிழும் தாத்தா
கட்ட சைக்கிள் ஓட்டவே
கற்றுத் தந்தத் தாத்தா
-வல்லநாடு ராமலிங்கம்

வெய்யில் காலம்

வெய்யில் காலம் வந்ததால்
வியர்வை உடம்பில் வழியுதே
நாக்கும் கூட தாகத்தால்
தண்ணீர் கேட்டு தவிக்குதே
தாரு போட்ட சாலையில்
தணலாய் வெய்யில் கொதிக்குதே
செருப்பில்லாமல் நடக்கவே
கால்கள் இரண்டும் மறுக்குதே
கிணற்றுத் தண்ணீர் மட்டமும்
கீழே கீழே போகுதே
-வல்லநாடு ராமலிங்கம்

நத்தை

நத்தைக் கூட்டைப் பாருங்கள்
நகரும் அழகை ரசியுங்கள்
கெட்டியான வீட்டினுள்
அமைதியாக வாழுது
மெல்ல எட்டிப் பார்க்கையில்
பட்டு மேனி மின்னுது
மழையின் காலம் முழுவதும்
கவலை இன்றி உலவுது
ஆசை கொண்டு தொடுகையில்
அதுவும் வாசல் அடைக்குது
-வல்லநாடு ராமலிங்கம்

பட்டணமும் போகலாம்

பட்டணமும் போகலாம்
பட்டுச் சொக்காய் வாங்கலாம்
பஸ்சில் ஏறி சுற்றலாம்
பண்டம் வாங்கித் தின்னலாம்
பூங்கா போய் ஆடலாம்
புதிய நட்பைத் தேடலாம்
அழகுப் பேனா வாங்கலாம்
ஆசை தீர எழுதலாம்
பட்டம் ஒன்று கட்டலாம்
பறக்க விட்டு மகிழலாம்
-வல்லநாடு ராமலிங்கம்

கருப்புநிற நாய்க்குட்டி

கருப்புநிற நாய்க்குட்டி
காவல் செய்யும் நாய்க்குட்டி
கள்ளமில்லா நாய்க்குட்டி
கடமையாற்றும் நாய்க்குட்டி
நன்றியுள்ள நாய்க்குட்டி
நன்மை செய்யும் நாய்க்குட்டி
வாலை ஆட்டும் நாய்க்குட்டி
செல்லப் பிராணி நாய்க்குட்டி
உண்மை வாய்ந்த நாய்க்குட்டி
உள்ளம் கவர்ந்த நாய்க்குட்டி
-வல்லநாடு ராமலிங்கம்

பாப்பா பாராய் என் பட்டம்

பாப்பா பாராய் என் பட்டம்
பறக்குது வானில் என் பட்டம்
விமானம் போலே வானத்திலே
விரைந்தே போகுது என் பட்டம்
அதிக அதிக உயரத்திலே
அழகாய் போகுது என் பட்டம்
எந்தன் பட்டம் பறப்பதையே
எல்லோரும் வந்து பாருங்களேன்
-வல்லநாடு ராமலிங்கம்

வெள்ளை நிறப் பூனை

வெள்ளை நிறப் பூனையொன்று வீட்டில் இருக்குது
தொல்லை தரும் எலிகளைத்தான் துரத்திப் பிடிக்குது
செல்லமாக மடியில் வந்து ஏறிக் கொள்ளுது
சிணுங்கலாக குரலைத் தந்து அன்பு காட்டுது
பசியும் வந்தால் பாலுக்காக செல்லம் கொஞ்சுது
-வல்லநாடு ராமலிங்கம்

குருவி

பஞ்சு போல் மேனியால்
பறந்து வரும் குருவியே
பக்கத்தில் வந்ததும்
பாசங் காட்டும் குருவியே
இரண்டு சிறிய கண்களால்
இரையைத் தேடும் குருவியே
இனிய கீச்சுக் குரலிலே
இசை பாடும் குருவியே
கோரைப் புற்கள் சுள்ளியால்
கூடு கட்டும் குருவியே
பொழுது சாயும் வேளையில்
கூடு திரும்பும் குருவியே
ஜோடியாக அன்புடன்
வாழ்ந்து வரும் குருவியே
-வல்லநாடு ராமலிங்கம்

எறும்பு

எறும்புக் கூட்டம் பாருங்கள்
என்ன ஒழுங்கு பாருங்கள்
வரிசையான பயணத்தின்
வாழ்க்கை முறையை போற்றுங்கள்
சுறு சுறுப்பாய் எறும்பிது
சோம்பல் தனத்தை வெறுக்குது
வேண்டுமளவு சேமித்து
மகிழ்ச்சியாக வாழுது
உழைப்பினாலே உயர்கின்ற
உண்மை நமக்குக் கூறுது
-வல்லநாடு ராமலிங்கம்

தபால்காரர்

தபால்காரர் வருகிறார்
தபால் கொண்டு தருகிறார்
வீடு தேடி வருகிறார்
மணியடித்து அழைக்கிறார்
வெய்யிலிலும் வருகிறார்
விரைந்து தபால் தருகிறார்
மழையின் போதும் வருகிறார்
மதித்து கடமை செய்கிறார்
காக்கி உடையில் வருகிறார்
கருத்தாய் கடமை செய்கிறார்
-வல்லநாடு ராமலிங்கம்

மல்லிகைப் பூ

வெள்ளை பிறப் பூவிது
விரும்புகின்ற பூவிது
வாசம் வீசும் பூவிது
வசந்தம் தரும் பூவிது
கூந்தல் நாடும் பூவிது
கோவில் மாலைப் பூவிது
மகிழ்ச்சி தரும் பூவிது
மலிவான பூவிது
ஏழை வாங்கும் பூவிது
எளிமையான பூவிது
-வல்லநாடு ராமலிங்கம்

பூங்கா

பூங்காவுக்குப் போகலாம்
பொழுதை நன்கு போக்கலாம்
இனிய காற்று வாங்கலாம்
இன்பம் பெற்றுச் செல்லலாம்
கவலை எல்லாம் மறக்கலாம்
கற்பனையில் மிதக்கலாம்
ஆசை தீர பேசலாம்
அழகு பூக்கள் ரசிக்கலாம்
பசுமை விருந்து பருகலாம்
அருமையாக ஓடலாம்
-வல்லநாடு ராமலிங்கம்

குழந்தை

மழலை மொழி பேச்சினால்
மனதைக் கவரும் குழந்தையாம்
மாசில்லாத உள்ளத்தால்
மகிழ்ச்சி தரும் குழந்தையாம்
கள்ளமில்லா பார்வையால்
கனிவு காட்டும் குழந்தையாம்
தவழ்ந்து போகும் குழந்தையாம்
தளர்ந்து போகா குழந்தையாம்
மிட்டாய் கேட்கும் குழந்தையாம்
மெல்லச் சிரிக்கும் குழந்தையாம்
-வல்லநாடு ராமலிங்கம்

கோழி

கொக்கரக்கோ - கொக்கரக்கோ
கோழி கூவுது
கூரையிலே ஏறி நின்னு
கூவிப் பார்க்குது
குப்பை கூளம் கிளறிப்பார்த்து
இரையும் தேடுது
தரையில் கிடக்கும் தானியத்தை
கிளறித் தின்னுது
விடியப் போகும் வேளையிலே
கூவி எழுப்புது
கொண்டையத் தான் ஆட்டிக்கிட்டு
நம்மைப் பார்க்குது
-வல்லநாடு ராமலிங்கம்

பொம்மை

பொம்மை நல்ல பொம்மை
புதுமையான பொம்மை
சொன்னதை கேட்கும் பொம்மை
சொக்காய் போட்ட பொம்மை
சிரிக்கும் அழகு பொம்மை
சிந்தை கவர்ந்த பொம்மை
கண்ணைச் சிமிட்டும் பொம்மை
கையை ஆட்டும் பொம்மை
மிடுக்காய் நிற்கும் பொம்மை
மிகவும் நல்ல பொம்மை
-வல்லநாடு ராமலிங்கம்

வாத்து

தத்தி நடக்கும் வாத்திது
தண்ணீரிலே நீந்துது
கூட்டமாக செல்லுது
கருத்தாய் இரை தேடுது
சின்னக் கண்கள் கொண்டது
சிங்காரமாய் உலவுது
வாய்க்கால் வரப்பில் ஓடுது
வாய் ஓயாமல் கத்துது
பெரிய முட்டை போடுது
வெள்ளை நிற வாத்திது
-வல்லநாடு ராமலிங்கம்

பறவைகள்

ஆடிக் களிக்கும் மயிலே வா
ஆட்டம் எனக்குச் சொல்லித் தா!
பாடிக் களிக்கும் குயிலே வா
பாட்டுப்பாட சொல்லித் தா!
தாவும் மானே அருகே வா
தாவிக் குதிக்க சொல்லித் தா!
கூவும் சேவல் இங்கே வா
கூவி எழுந்திட சொல்லித் தா!
-வல்லநாடு ராமலிங்கம்