இக்காட்சியிலே பாட்டு பிறந்தது

மாலை நேர மஞ்சள் வெயில் மகிழ்ச்சி அளிக்குது
மரச் செறிவில் குயிலினங்கள் பாடிக் களிக்குது!
சோலைவனம் வாவிக்கரை சொர்ண ஜாலங்கள்
சொக்குதடா அருவியோரம் இசையின் தாளங்கள்!
செங்குமுதம் தேன்நிலவைப் பார்த்துச் சிரிக்குது
சின்னச் சின்ன தாரகைகள் கண்ணைப் பறிக்குது!
எங்கிருந்தோ தென்றல் வந்து தேகம் தழுவுது
இனிய செடிகொடிகள் எல்லாம் பூவைப் பொழியுது!
ஆடுமாடு மணிகளோசை குலுங்க வருகுது
அதனை நாமும் காணும் போது மகிழ்ச்சி பெருகுது!
பாடும் கடலோசையில் என் பாடம் மறந்ததே
பார்த்த இக்காட்சியிலே பாட்டு பிறந்தது!

0 comments: