நன்நடத்தை

ராமு மிகவும் நல்லவனாம்,
நடத்தையில் மிக்க உயர்ந்தவனாம்.
எவருக்கும் அன்பாய் நடப்பவனாம்
இரக்கம் மிகவும் உடையவனாம்.
ஆயினும் நல்லவன் என்றவனை
அறிபவர் மிகமிகச் சிலரேதான்.

ஒருநாள் வீதியில் பெருங்கூட்டம்
ஒன்று கூடி நிற்பதை நான்
கண்டேன். உடனே, சென்றங்கே
காரணம் யாதெனக் கேட்டேன் நான்.

பாலு என்னும் ஒரு பையன்
பழக்கடை ஒன்றில் நுழைந்தானாம்;
மாம்பழம் ஒன்றை எடுத்தானாம்,
மறைத்து மடியில் வைத்தானாம்.

பார்த்ததும் உடனே கடைக்காரர்
'பட்'டென அறைகள் விட்டாராம்.
'திருடன், திருடன்' என்றவனைத்
திட்டினர் அங்கு யாவருமே.

பாலு கெட்டவன் என்றறியப்
பத்தே நிமிடம் ஆனதடா.
ராமு நல்லவன் என்றுணர
நாட்கள் பற்பல ஆகுமடா.

கெட்டவன் என்ற பெயரெடுக்க
'சட்'டென முடியும். ஆனாலோ
நல்லவன் என்ற பெயர் பெறவே
நாட்கள் மிகவும் ஆகுமென
அறிந்தேன், அன்று ஓர் உண்மை
அடைவோம் இதனால் பெரும் நன்மை.

1 comments:

இன்றைய கவிதை said...

விதூஷ்

ரொம்ப நாள் கழித்து தங்கள் பதிவை பார்த்தேன்

ரசித்தேன் , நல்லவன் ஆவது எவ்வள்வு கடினம் இது எல்லா குழந்தைகளையும் படிக்க சொல்லலாம்

பெரியவர்களை ? ம்ஹும் ஒண்ணும் சொல்றதுக்கில்லை

நன்றி விதூஷ்

ஜேகே