ஒரே அடியில் ஒன்பது பேரைக் கொன்றவன்


 ஒரே அடியில் ஒன்பது பேரைக் கொன்றவன் by தினேஷ்

ஒரு ஊரில் ஒரு டெய்லர் ஒருவன் வசித்து வந்தான். அந்த ஊரில் யாரும் புதுத்துணி போடுவதே இல்லை. கிழிந்ததைத் தைப்பவர்கள் மட்டுமே அவனிடம் வருவார்கள். இதனால் பெரும்பாலான நேரம் ஈ ஓட்டுவதே அவன் முக்கிய வேலையாக இருந்தது.

அப்படிப்பட்ட நாட்களில் ஒருநாள் வழக்கத்தை விட அதிகமான ஈக்கள் மொய்க்கவே கோபத்தில் தைத்துக்கொண்டிருந்த கிழிசல் துணி ஒன்றை எடுத்து வேகமாக வீசினான். பிறகு பார்த்தால் ஒன்பது ஈக்கள் அங்கே செத்துக் கிடந்தன. அட ஒரே அடியில் ஒன்பது பேரைக் கொன்று விட்டோமே என்று பெருமைப் பட்டுக்கொண்டான். ஒரு துணியில் ஒரே அடியில் ஒன்பது பேரைக் கொன்றவன் என்று எழுதி இடுப்பில் கட்டிக்கொண்டான். டெய்லர் தொழிலை விட்டுவிட்டு ஊர் ஊராகச் செல்ல ஆரம்பித்தான். மற்ற ஊர் மக்களும் அவன் இடுப்புத் துணியில் எழுதியிருந்ததை நம்பி பயந்து அவனுக்கு சாப்பாடும் தங்க இடமும் கொடுத்தனர்.

இப்படியே அந்த டெய்லர் ஒரு ஊருக்கு வந்து சேர்ந்தான். வழக்கம்போல அவனுக்குச் சாப்பாடு போட்டனர். ஊர் மக்களின் முகத்தில் ஒரு சோகம் தெரிவதை உணர்ந்து விசாரித்தான். ஊர் மக்களும் ஒரு அரக்கனால் அவர்கள் படும் அல்லல்களைக் கதை கதையாகச் சொன்னார்கள். அந்த அரக்கனிடமிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள் என்று கோரிக்கையும் வைத்தார்கள். டெய்லரும் சரி என்று வாக்குக் கொடுத்தான்.

அடுத்த நாள் அந்த அரக்கனை எதிர்கொள்ள அவன் இருக்கும் மலையை நோக்கி பயணத்தைத் துவக்கினான். வழியில் சாப்பிட கொஞ்சம் வெண்ணெய் தடவிய ரொட்டியையும் ஒரு பையில் எடுத்துக் கொண்டான். மலை மீது ஏறிக்கொண்டிருக்கும்போது ஒரு பறவை காலில் காயத்துடன் பறக்க முடியாமல் இருப்பதைப் பார்த்தான். அதன் காலில் மருந்து போட்டு அதை எடுத்து பையில் வைத்துக் கொண்டான். மாலை நேரத்தில் மலையின் உச்சிக்கு வந்து சேர்ந்தான்.

அங்கே அந்த அரக்கன் தங்கியிருந்த குகைக்கு வெளியே நின்று “ஏய் அரக்கா. வெளிய வாடா.. ஒரே அடியில் ஒன்பது பேரைக் கொன்னவன் வந்திருக்கேன். உன்னைக் கொல்லாம விடமாட்டேன்” என்று தைரியமாகக் கத்தினான். இவன் கத்தியதைக் கேட்ட அரக்கனும் யார் என்று பார்க்க வெளியே வந்தான். இவனைப் பார்த்ததும் ‘யாரடா இந்தப் பொடியன்’ என்று நினைத்தவன் அவன் இடுப்பில் கட்டியிருந்த பட்டியில் எழுதியிருந்ததைப் பார்த்ததும் ஒரு நிமிடம் திடுக்கிட்டுப் போனான். இருந்தாலும் தைரியமாக “யாருடா நீ. என்னைக் கொல்ல வந்திருக்க?” என்று கர்ஜித்தான்.

டெய்லர் கொஞ்சம் கூட பயப்படாமல், “உன்னைப் பார்த்தா பாவமா இருக்கு. நம்ம ரெண்டு பேருக்கும் இடையில மூணு போட்டி வச்சிக்கலாம். நீ ஜெயிச்சா என்னை கொன்னு தின்னுக்கோ. நான் ஜெயிச்சிட்டா நீ இந்த ஊரை விட்டே ஓடிப்போகணும். ஒத்துக்கிறியா?” என்று கேட்டான். கொஞ்சம் யோசித்த அரக்கன், ‘பொடிப்பயல். நம்மகிட்ட ஜெயிச்சிற முடியுமா?’ என்று முடிவெடுத்து “நான் ரெடி. ஆனா என்ன போட்டின்னு நான் தான் சொல்லுவேன் சரியா?” என்றான். டெய்லரும் ஒத்துக்கொண்டான்.

“முதல் போட்டி” என்று சொல்லிவிட்டு கீழே கிடந்த கல் ஒன்றை எடுத்து வலது கையால் அழுத்திப் பிசைந்தான் அரக்கன். அந்தக் கல் பொடிப்பொடியாக உடைந்து மண்ணாக உதிர்ந்தது. “இது மாதிரி நீ செய் பார்ப்போம்” என்று டெய்லரைப் பார்த்தான். டெய்லர் கீழே இருந்து கல்லைப் பொறுக்குவது போல பாசாங்கு செய்துவிட்டு பையில் இருந்து வெண்ணெய் தடவிய ரொட்டியை எடுத்து கைக்குள் வைத்து கசக்கினான். ரொட்டியில் இருந்த வெண்ணெய் விரலிடுக்குகளில் வழிந்தது. “பாத்தியா? உன்னால கல்லை மண்ணாத்தான் ஆக்க முடிஞ்சிச்சி. நான் அந்த மண்ணை எண்ணையாவே ஆக்கிட்டேன்” என்று அரக்கனைப் பெருமையாகப் பார்த்தான். அரக்கனும், “நீ தான் ஜெயிச்ச” என்று ஒத்துக் கொண்டான்.

அடுத்துக் கீழே இருந்து இன்னொரு கல்லை எடுத்து தூர எறிந்தான். அது 10 நிமிடம் கழித்து கீழே விழுந்தது. டெய்லரிடம் “எங்க நீ எறி. என்னை விட அதிக நேரம் மேலயே வச்சிருக்க முடியுமான்னு பார்ப்போம்” என்று சொன்னான். டெய்லரும் கீழே இருந்து ஒரு கல்லைப் பொறுக்குவது போல நடித்து பைக்குள் இருந்த பறவையை எடுத்து மேலே எறிந்தான். பறவையும் பறந்து போனது. அரை மணி நேரத்துக்கு மேலாகியும் பறவை கீழே வரவில்லை. அரக்கன் தலை குனிந்து தோல்வியை ஒப்புக் கொண்டான்.

“கடைசியா ஆளுக்கொரு மரத்தைத் தூக்கிட்டு இந்த மலையில இருந்து எறங்குவோம். யாரு கீழ வரைக்கும் களைப்பில்லாம வர்றாங்களோ அவங்க தான் ஜெயிச்சவங்க. சரியா?” என்று டெய்லரைப் பார்த்துக் கேட்டான். டெய்லரோ, “ம்ஹும். அது சரிப்பட்டு வராது. நீ ஒருவேளை சின்ன மரமா எடுத்துட்டா. அதுனால ஒரே மரத்தையே ரெண்டு பேரும் தூக்கிட்டு இறங்கலாம். சரியா?” என்று கேட்டான். அரக்கனும் சரி என்று சொல்லிவிட்டு இருப்பதிலேயே பெரிய மரம் ஒன்றை வேரோடு பெயர்த்தான். டெய்லர் மரத்தைச் சுற்றி வந்து பார்த்துவிட்டு, “அரக்கா, நான் மரத்தோட மேல் பாகத்தைத் தூக்கிக்கிறேன். ஏன்னா அதுதான் பெருசா இருக்கு. நீ சின்னப்பயல். அதுனால அடிப்பாகத்தைத் தூக்கிக்கோ” என்று சொல்ல, அரக்கனும் முதலிரண்டு போட்டிகளில் தோற்றுப் போனதால் ஒத்துக் கொண்டான். அரக்கன் மரத்தின் அடிப்பாகத்தைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு போக டெய்லர் மரத்தின் கிளைகளில் ஒன்றில் ஏறி அமர்ந்து இளைப்பாறிக்கொண்டே வந்தான். மலையின் அடிவாரத்தை நெருங்கும்போது மரத்திலிருந்து குதித்து தூக்கிக் கொண்டு வருவது போல பாசாங்கு செய்தான். அரக்கனுக்கோ மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. டெய்லர் மிகவும் ஃப்ரெஷாக இருக்கவும், அரக்கன் தன் தோல்வியை ஒத்துக் கொண்டு அந்த ஊரை விட்டே ஓடிப் போனான்.

ஊர் மக்களும் அந்த டெய்லரை தலைக்கு மேல் தூக்கிக் கொண்டாடினார்கள். அந்த டெய்லர் அந்த ஊரிலேயே தங்கி ஊர்த்தலைவராகவும் இருந்து அந்த ஊரை திறமையாக மேலாண்மை செய்து வந்தான்.

நீதி: எதிரி எப்பேர்ப்பட்ட பலசாலியாக இருந்தாலும், நம் அறிவை உபயோகப் படுத்தி அவர்களை எளிதாக வென்றுவிடலாம்.

0 comments: