சமாதானம் by பிரசாத் வேணுகோபால்


அப்பப்பா இது ஆகாதப்பா
அழுகையை நீ கொஞ்சம் குறைத்திடப்பா
பந்துகள் உண்டு பலூனுண்டு
சாவி கொடுத்தால் ஓடும் காருண்டு

பார்முழுக்க நீ பவனிவர
யானையாக இங்கு நானுமுண்டு
பாலுண்டு இனிக்கும் தேனுண்டு
படுத்துறங்க தூளியுண்டு

கலகலப்பாய் பல கதைகள்சொல்ல
காவலனாய் இங்கு நானுமுண்டு
எதுவேண்டும் அதைக் கேட்டிடப்பா
அரற்றுவதை நீ நிறுத்திடப்பா

எனைவிடுத்து நீ எங்கேயோ
எதைக்கண்டு நீ . சிரிக்கிறாயோ
ஆஹா இதோ வந்துவிட்டாள் – உன்
அன்னை தரிசனம் தந்துவிட்டாள்

வித்தைகள் பலது நான் புரிந்தும்
வீம்பாய் அழுது அரற்றியநீ
வாசலில் அன்னையைக் கண்டவுடன் – பொக்கை
வாயினில் சிரிப்பது விந்தையப்பா…

0 comments: